தமிழகத்தில் நகர்ப்புற குடியிருப்பு 12,,50,000 வீடுகள் பற்றாக்குறை..!
நகர்ப்புற வீடுகளுக்கு புத்துயிர் அளித்தல்–
பழைய கட்டிடங்களை மறுசீரமைக்கவும் மறுவடிவமைக்கவும் தமிழக அரசுக்கு கிரெடாய் சென்னை – சாவில்ஸ் அமைப்பு வேண்டுகோள்
~ தமிழகத்தில் நகர்ப்புற குடியிருப்புகளை பொறுத்தவரை 12 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் பற்றாக்குறையாக இருப்பதாக ஆய்வில் தகவல் ~
சென்னை, மே 31– 2023: கிரெடாய் சென்னை, சாவில்ஸ் அமைப்புடன் இணைந்து நடத்திய 'சென்னையின் ரியல் எஸ்டேட் விஷன் 2030' என்னும் ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வானது நகரில் உள்ள குறைந்த விலை வீடுகள், வாடகை வீடு, பொருட்கள் பாதுகாப்பு கிடங்கு, மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை குறித்து மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை நகர்ப்புறங்களில் 12 லட்சத்து 50 ஆயிரம் குடியிருப்புகள் பற்றாக்குறையாக இருப்பதால், நகர்ப்புற வீடுகளுக்கான தேவை மற்றும் வழங்கல் இடைவெளியை குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில் பூந்தமல்லி, ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் மற்றும் போர்ஷோர் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீட்டு மனை திட்டங்களை மேம்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும் அரசுக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் காலி நிலங்களை மீண்டும் மேம்படுத்தி, குடியிருப்பு, வணிக வளாகங்கள் மற்றும் வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய அரசின் குறைந்த வாடகை வீட்டு வளாகங்கள் திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இவற்றை கட்டி 25 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடலாம் என்பதோடு, சென்னையின் மையப் பகுதிகளில் நெரிசலைக் குறைப்பது என்பது அரசு கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஆகும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் உள்ளது என்றும், இது மத்திய அரசின் குறைந்த வாடகை வீட்டு வளாகங்கள் திட்ட வரம்பிற்குள் வருகிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் நகரின் மையப் பகுதியில் உள்ள நெரிசல் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் கிண்டி மற்றும் மவுண்ட் பூந்தமல்லி போன்ற மத்திய வணிக மாவட்டங்களை மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகம் மற்றும் சைபர் சிட்டி, குருகிராம் போன்று உருவாக்கலாம் என்றும் இந்த ஆய்வு மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை குறித்து கிரெடாய் சென்னை மண்டல தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், வீட்டுவசதியைப் பொறுத்தவரை இந்த ஆய்வு குறைந்த வாடகை மற்றும் சிறப்புப் பிரிவுகள், தொழிலாளர்களை மையமாகக் கொண்ட வீடுகள், அரசு சொத்துக்களை மீண்டும் மேம்படுத்துதல், பொருட்கள் பாதுகாப்பிற்கான கிடங்குகள், தொழில்துறைக்கான தொழில்நுட்ப வசதிகள், ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நெரிசலை குறைத்தல் உள்ளிட்ட 7 முக்கிய விஷயங்களை இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் சென்னையை தேர்வு செய்யும் வகையில் அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தின் வருங்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், குளிர் சேமிப்பு தளவாட மையங்களின் உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான வரி சலுகைகளை வழங்கவும், மின்சார கட்டணத்தில் மானியம் வழங்குமாறும் எங்கள் அமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆய்வானது, பணியாளர்கள் பணிபுரியும் பகுதியில் 5 கிமீ சுற்றளவில் அவர்களுக்கு வீட்டு வசதி மற்றும் தங்கும் விடுதி வசதிகளை மேம்படுத்த தொழில்துறை திட்டங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. மாநிலத்தில் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வேலை செய்து வருகிறார்கள். இதுபோன்ற கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வெளிவட்ட சாலை, வட சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை சிறந்த இடங்கள் ஆகும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் குளிர் சேமிப்பு கிடங்கு, ஊடகம், கேமிங், சுற்றுலா, மருந்துகள், வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு மற்றும் பொம்மைத் தொழில் உள்ளிட்ட ஏராளமான வாய்ப்புகள் நிறைந்த, அதிக திறன் கொண்ட 7 துறைகளிலும் கிரெடாய் – சாவில்ஸ் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தி இருக்கின்றன. இவை தவிர, ஹோம் ஆட்டோமேஷன், பர்னிச்சர், மற்றும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொழில் போன்ற சாத்தியமான துறைகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment